கல்லூரி வகுப்புகள்தொடங்கும் தேதி 2021-22 : புதிய கால அட்டவணையை வெளியிட்டது ஏஐசிடிஇ | College Open Date Acadamic Year 2021-22 Announcement by AICTE

செப்.1 முதல் கல்லூரி வகுப்புகள்: புதிய கால அட்டவணையை வெளியிட்டது ஏஐசிடிஇ

புதிய கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை ஏஐசிடிஇ திருத்தி வெளியிட்டுள்ளது. இதன்படி தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்கவுள்ளன.

நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தொழில்நுட்பக் கல்லூரிகளும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் (ஏஐசிடிஇ) கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கரோனா 2-வது அலை காரணமாக புதிய கல்வியாண்டு தொடக்கமும் மாணவர் சேர்க்கையும் தள்ளிப் போயுள்ளது. இதனையடுத்து புதிய கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை ஏஐசிடிஇ திருத்தி வெளியிட்டுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், முதுகலை மேலாண்மை நிறுவனங்கள், தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை அங்கீகாரத்தைப் பெற ஜூன் 30 கடைசித் தேதி ஆகும். அதேபோல பல்கலைக்கழகங்கள் /கல்வி வாரியங்கள் கல்லூரிகளுக்கான இணைப்பை வழங்க ஜூலை 15 கடைசித் தேதி ஆகும்.

2021- 22ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கான  முதற்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவுபெறும். தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்கும்.

முதலாம் ஆண்டு தொழில்நுட்பப் படிப்புகளுக்கான வகுப்புகள் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்குகின்றன. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தரும் வகையில் தொழில்நுட்பப் படிப்புகளின் இடங்களைத் திரும்பப் பெற செப்டம்பர் 10 கடைசித் தேதி ஆகும்.

முதுகலை மேலாண்மை நிறுவனங்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் வகுப்புகளைத் தொடங்கலாம். அதற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 11 கடைசித் தேதி ஆகும். முழுக் கட்டணத்தையும் திருப்பித் தரும் வகையில் முதுகலை மேலாண்மைப் படிப்புகளின் இடங்களைத் திரும்பப் பெற ஆகஸ்ட் 6 கடைசித் தேதி ஆகும்.

கரோனா தொற்று நெருக்கடி குறைந்து இயல்பு நிலை திரும்பும் வரை மாணவர்களை முழுக் கல்விக் கட்டணம் செலுத்த நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது.

மாணவர்களிடம் கட்டணத்தை 4 தவணைகளில் வசூலிக்க வேண்டும். மேலும், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை எக்காரணம் கொண்டும் வேலையிலிருந்து நீக்கக் கூடாது. அவ்வாறு நீக்கப்பட்டிருந்தால் அந்த உத்தரவுகளைக் கல்லூரிகள் திரும்பப் பெற வேண்டும். பேராசிரியர்களுக்குரிய மாத ஊதியத்தை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும்.

பெருந்தொற்றுக் காலத்தில் அனைத்து கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் அல்லது இரண்டு முறைகளையும் பின்பற்றி வகுப்புகளைத் தொடங்கலாம்''.

இவ்வாறு ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.


#College-Reopen-Date2021-Tamil #College-Open-Date2021 #College-open-2021-Date #College-Reopen-Date #College-Open-Date #AICTE 


Related Posts

கருத்துரையிடுக